Sunday, November 12, 2006

மணப்பாடு கடற்கரை

தசராவிற்கு அடுத்த நாள் திருச்செந்தூர் செல்லாம் என முடிவு எடுத்து புறப்பட்டோம். திருச்செந்தூரை அடைந்தோம்கோயிலில் நடை திறக்க நேரமிருந்ததால் அருகிலுள்ள குலசேகரப்பட்டணம் செல்லாமென வண்டியை திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் திருப்பினோம். ஒரே கூட்டம் முந்தாநாள் தசராவிற்கு கண்முழித்ததால் மனித குப்பைகள் போல் நிறைய பேர் அங்காங்கே உள்ள திண்ணையில் உறங்கி கொண்டிருந்தனர்.ஊருக்கு திரும்பும் கூட்டம் வேறு வண்டியை ரதம் போல் செலுத்த வைத்தது. கோயில் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு கோயிலுக்கு சென்றால் எந்த அன்னிய தாக்கம் உடையிலோ மனதிலோ இல்லாத தமிழர்கள் கூட்டம் அம்மனை காண திரண்டிருந்தது.இந்த கூட்டத்தில் நின்று அம்மனை பார்க்க வேண்டுமென்றால் வெகு நேரமாகுமென முடிவுக்கு வந்து மணப்பாடு சென்றோம். ஊரில் மருந்துக்கு கூட ஒரு இந்துவீடு இல்லை. வண்டி வறட்சியான அந்த மணற்குன்றின் மீது கரடுமுரடான சிமெண்ட் சாலையில் சாலையை செப்பினிட சாலைஓரங்களில் போட்டிருந்த ஜல்லிகுவியலில் டயர் அடிபட ஏறிகொண்டிருந்தது. சற்று வண்டியின் சன்னல் வழியாக மணப்பாட்டின் கடற்கரையினை பார்த்தால் என்ன அழகு .சின்ன தீபகற்ப மணற்திட்டு, மணற்பாடு மணற்குன்றுக்கு பிறந்த நோஞ்சான் பிள்ளைபோல் சின்னதாய் செல்ல பிள்ளைபோல் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது. குன்றியின் உச்சியில் இறங்கினோம். 15 அல்லது 16 நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித தூயஆவியின் தேவாலயம் ஒன்று அங்கு உள்ளது . அதில் என்னமோ மனம் லயிக்கவில்லை. அதன் அருகில் உள்ளே செல்ல அனுமதியில்லாத மைய அரசின் உயரமான கலங்கரை விளக்கம் . கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன பலகை புனிதசேவியர் குகைக்கு வழிகாட்டிகொண்டு நின்றது.அக்குகை மணற்குன்றின் அடிபக்க கடற்கரையில் சின்னதாக இருந்தது.15ம் நூற்றாண்டில் புனித சேவியர் இக்குகையில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டதாக ஒரு கல்வெட்டு பறைசாற்றிக்கொண்டியிருந்தது.அந்த குகையில் ஒரு சின்ன நன்நீர் கிணறு .கடலுக்கும் குகைகிணறுக்கும் இரண்டு அடிதூரம் தான் இருக்கும் ஆனால் கிணற்று நீர் நல்ல குடிநீராக இருப்பது அதிசயம் தான். கடற்கறை ஒரமாக நடந்து அந்த மணற்திட்டிற்கு நடந்தோம். நான்கு வயது கூட நிரம்பாத ஐந்தாறு சின்ன குழந்தைகள் சுதந்திரமாக அம்மனமாக அலையுடன் விளையாடிக்கொண்டிருந்தன.அவர்கள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி.நாமும் குழந்தையாகவே இருந்திருக்க கூடாதா என அவர்களை கண்ட போதுஅடி மனதில் ஒரு எண்ணம் வந்து போனது. அலைகள் அதிமாக அடிக்கும் பொழுது சில மீன்கள் திட்டின் கரையில் மாட்டி தற்கொலை செய்து கொண்டு கருவாடாக காய்ந்து கொண்டிருந்தன. திட்டின் மேற்கு பக்க நுனிக்கு செல்ல செல்ல மணற்திட்டு கொஞ்சம் தொள தொளவேன இருந்தது.வேண்டாம் விபரீத பரீட்சையென திரும்ப மலையெறி வண்டியை அடைந்தோம்.வண்டி கீழே இறங்க இறங்க அந்த அழகிய கடற்கரை தோற்றம் கண்ணிலிருந்து மறைந்து கொண்டிருந்தது. ஆனால் மனதில் சித்திரமாய் தங்கிவிட்டது. அதனால் தான் எழுத தோன்றியதோ.

No comments: